அரக்கோணம் கோ.வீ. சுரேஷ்
இரண்டாம் பாகம்
21
""ஐயனே, மன்னர் தங்கள்வசம் வணக் கங்களை சமர்ப்பித்து, மலர்களை யும் பழங்களையும் சேர்ப்பிக்கச் சொன்னார்'' என வெங்கண்ணர் பணிவுடன் தலைவணங்கி நின்றார்.
ஸ்வாமிகள் புன்னகைத்தார். அனைத் துத் தட்டுகளும் வண்ணத்துணிகளால் மூடப்பட்டிருப்பதைக் கண்ணுற்று மறுபடியும் புன்னகைத்தார்.
""நல்லது வெங்கண்ணரே. எனக்கு மகிழ்வாக இருக்கிறது.''
""தாங்கள் புன்னகைத்து முடித்து மறுபடி அதனைத் தொடர்ந்தபோதே நான் புரிந்துகொண்டேன் ஸ்வாமி.''
""புன்னகைக்கு மகிழ்ச்சி மட்டும்தான் காரணமாக இருக்குமா வெங்கண்ணா?''
""ஆம் ஸ்வாமி. அதுதானே அடிப்படை. மற்றபடி என் சிற்றறிவுக்கு விளங்கியது தவறாகவும் இருக்கலாம் ஸ்வாமி. அந்த மற்றொரு காரணத்தை நான் அறியலாமா?''
""ஆம். நிச்சயமாக. முதன்முதலாக உமது மாளிகையில் மன்னர் என்னை சந்திக்கையில், இதுபோன்று பல வண்ண வஸ்திரத்தில் மூடியபடி பெரிய தட்டுகளை சமர்ப்பித்தது ஞாபகம் வந்தது. அது போலவே இன்றும் என்று...''
வெங்கண்ணர் பதறிப் போனார்.
""அது ஏதோ ஸ்வாமிகளது மகிமை களைத் தெரியாது சோதிக்கப் போவதாய்- சிறுபிள்ளைத்தனமாய் அறியாது செய்த தவறு. மன்னர் இப்போதெல்லாம் தங்களை வியந்து பேசாத நாளே இல்லை. தங்கள்மீது அபார பக்தி கொண்டுள்ளார். தங்களுக்கான தேவைகளை உடனுக்குடன் கேட்டறிந்து செய்யச்சொல்லி உத்தர விட்டுள்ளார். சிலசமயம் இரவு நேரங் களில் அவரே மாளிகைக்கு வந்து என்னை சந்தித்து தங்களது நலனை என்னிடம் கேட்டறிந்து திருப்தியுற்ற பிறகே செல்வார். பிறகுதான் தெரியும்- அவர் அதுவரை உணவருந்தியிருக்கமாட்டார் என்று.''
ஸ்ரீராகவேந்திரர் கண்மூடி ""ராமா ராமா'' என்றார். பிறகு மன்னர் அரண்மனை நோக்கி இருகரம் தூக்கி வாழ்த்தினார்.
மாற்று மதம் என்று துவேஷிக்காது அரவணைக்கும் பாங்கு மன்னரது உயர்ந்த மனநிலையைக் காட்டுகிறது. தன்னை நோகடித்ததற்காக அவர் மனதுள் மறுபடி மறுபடி உடைந்துபோனதை ஸ்ரீராயரால் நன்குணரமுடிந்தது.
""மன்னர் தங்களுக்கு தானம் செய்யப் பட்ட நிலத்திற்கு பாத்யதைப்பட்ட காஜிக் களுக்கு, அவர்கள் தலைமுறைக்கும் சம்பாதிக்க முடியாத அளவுக்கு செல்வங் களை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு விட்டது. மேலும் தங்களை நேரில் சந்தித்து, தங்களது அனைத்து தேவைகளையும் அறிந்து நிறைவேற்றதான் தங்களை சந்திக்க இயலுமா என கேட்டு உத்தரவு வாங்கவே நான் வந்துள்ளேன் ஸ்வாமி.''
ஸ்ரீராயர் மிகவும் மகிழ்ந்தார்.
""நல்லது. மன்னர் என்மீது கொண்ட அபிமானம் அந்த ஸ்ரீராமனது அருள். எனக்கு இப்போதைக்கு எந்த வசதிக்குறைவையும் மன்னர் அளிக்கவில்லை. நான் மிகவும் மகிழ்ந்ததாக அவரிடம் தெரிவியுங்கள். இந்த மந்த்ராட்சதையை நான் கொடுத்ததாக அவரிடம் சேர்ப்பித்து விடுங்கள்'' என்றவர் சற்றதிகமாகவே கைக்கொள்ளுமளவு மந்த்ராட்சதையை எடுத்து கண்மூடிப் பிரார்த்தித்துக் கொடுக்க, மிகுந்த பக்தியுடன் பெற்றுக் கொண்ட வெங்கண்ணாவை வாழ்த்தினார்.
அருகிலிருந்து கவனித்துக்கொண்டி ருந்த சீடர் நாராயணாச்சாரியார் இந்நிகழ் வினைக் குறிப்பெடுத்துக் கொண்டிருக்க, ஸ்ரீராயர் அவரை அருகே அழைத்தார். பவ்யமுடன் நெருங்கி வணங்கினார்.
""என்ன நாராயணா... எழுதிக் கொண்டிருக்கிறாயா. எப்போது முடிக்கப் போகிறாய்?''
""தினசரி குறிப்பெடுத்து அதனைத் தேவைப்படின் தங்களது சரிதத்தில் சேர்த்துக்கொள்கிறேன். அப்படி யில்லாதபட்சத்தில் அந்த குறிப்புகளை பத்திரப்படுத்திக்கொள்கிறேன். அப்படி யான நிகழ்வுக் குறிப்புகளை நாள் குறிப்பிட்டு, நேரம் குறிப்பிட்டுவைத்து தனியே பத்திரப்படுத்தியுள்ளேன்.''
""சரியப்பா... நல்லது. எப்போது முடிக்கலாம் என்றெண்ணுகிறாய்?''
""ஸ்வாமி. இதற்கென்ன விளக்கம் பதிலாய்த் தருவதென்று தெரியவில்லை. மேலும் முடிப்பதென்பது என் வசமில்லை'' என்று சொல்லும்போதே அவரது கண்கள் கலங்கிவிட்டன.
""ஏனப்பா ஏன்?''
""எனக்கு நடுக்கமாக இருக்கிறது. முடிவென்பதை என்னால் யோசிக்கக்கூட இயலவில்லை'' என்றவர் பிரவகிக்கும் கண்ணீரை உதடு கடித்து அடக்கமுயல, ""ஆரம்பம் என்றிருக்கையில், முடிவும் இருக்க வேண்டுமென்பதுதானே நியாயம்கூட. சரி; இதுவரை எவ்வளவு முடித்திருக்கிறாய்?''
""தங்களது கருணையால் பத்திற்கும் அதிகமாக...''
""அப்படியா. நானே சரிபார்த்தபின் சம்மதிக்கிறேன். நீ முடிக்கவேண்டிய பகுதியினை நெருங்கிக் கொண்டிருக்கிறாய்.''
""ஸ்வாமி!'' என்றவரின் நெற்றி கேள்வியால் சுருங்க...
""இப்போதைக்கு இதுமட்டும் புரிந்தால் போதும் உனக்கு.''
அன்றைய வகுப்பினில் ஸ்ரீமன் நாராயண னது சகஸ்ரநாம ஸ்லோகத்தை வரிக்கு வரி அவர் பாணியில் விளக்கமாய்- விஸ்தாரமாய் ஸ்ரீராயர் விவரித்துக்கொண்டிருந்தார்.
""தீர்த்தங்களில் உயர்ந்ததும் மகா பவித்ர மானதுமான தீர்த்தம் கங்கா தீர்த்தமே. ஆலிலையில் படுத்து வலதுகால் கட்டை விரலை சுவைக்கும் அந்த ஸ்ரீஹரி, வாமனத் தோற்றத்தில் தனது பிரம்மாண்ட ரூபத்தில் விஸ்வரூபியாய் ஈரடி அளந்தபோது, அத்திருப்பாதம் வானம் பார்த்து மூவுலகம் படர்கையில், இந்த பூமியினைச் சுற்றியுள்ள ஆதுரண ஜலத்தையும் கிழித்து, பிரம்மனது சத்யலோகம் தாண்டும்போது, ஸ்ரீபாத தரிசனம் செய்து பிரம்மன் தன் கமண்டல நீரால் அத்திருப்பாதம் கழுவி நமஸ்கரிக்கை யில், அப்பாதத்திலிருந்து விழுந்த புண்ணிய துளி கங்கா நதியாய் பெயர் சூடி பூமிக்கும் புண்ணியம் சேர்த்தது. மூன்றுலோகம் கடந்து திரிபாதகா என்ற ஜன்வ மகரிஷியின் செவிவழி வந்ததால் ஜான்வி என்றும் பல பெயர்களால் அழைக் கப்பட்ட புனித கங்கை, ஸ்ரீமன் நாராயண னின் பாதத்தில் ஒரு கணம் பட்டதற்கே இந்த லோகத்திற்கே புண்ணியம் தரும் தீர்த்தமாகிப்போனது. அப்பேற்பட்ட பாதத்தை நாம் பற்றிக் கொண்டோமானால் எப்பேற்பட்ட பேறு நமக்குக் கிட்டும்...'' ராயர் விவரித்துக் கொண்டிருந்தபோது...
எதிரே அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்த லக்ஷ்மி நாராயணன் ஸ்ரீராயரை இமைக்காது பார்த்துக்கொண்டிருந்தான். "எப்பேற்பட்ட பிரம்மம் பாடம் நடத்திக்கொண்டிருக்கிறது. அதுவும் பிரம்மம் பற்றிப் பாடம் எடுத்துக்கொண்டிருக்கிறது. "குன்றம் ஏந்தி குளிர்மழை காத்தவன்' என்கின்ற பதம் மனதில் ஓடுகையில், எதிரேயிருப்பவர் அந்த பிரளய வர்ஷத்திலிருந்து ஆநிரை களைக் காக்கும் கண்ணனாக அல்லவா என் கண்களுக்குத் தெரிகிறார்! "ஞாலம் அளந்த பிரான்' என்கிறபோது பூவுலகம் வந்த உத்தமராக- அசுர குரு சுக்கிராச்சாரியார் தடுத்தும், எதிரிலிருப்பது பரப்பிரும்மம்- அதுவே தன்னிடம் மூவடிதானே கேட்கிறது என்று கமண்டல நீரைக் கரங்களில் வர்ஷித்து தானமளிக்க, மூவுலகளந்த பிரம்மாண்ட பிரானாய் உருவெடுத்த திரிவிக்ரமனாக அல்லவா என் குரு எனக்குத் தெரிகிறார்.
"சந்நியாச ஸ்வீகாரம் என்ற நிகழ்வு மட்டும் நடக்காமலிருந்தால் அவர் அன்பை எவ்வா றெல்லாம் கொண்டாடி இருக்கமுடியும். பாலகனாய் இருந்தபொழுதில் என்னைத் தூக்கி தோள்மீது சாய்த்து தலைகோதி முதுகு தடவி தூங்கச் செய்திருக்கிறார். அந்த விரல்களுக்குதான் எவ்வளவு சக்தி. சரீரத்தை தூக்கம் மெல்லமெல்ல ஆட்கொள்ளும் அந்த சுகம் இனி எப்போதும் வாராதே. இரு விரல்களை நான் இறுகப்பற்றிக்கொள்ள, மெல்ல மெல்ல ஜாக்கிரதையாய் என்னைத் தூக்கி விளையாடியவரை என்னால் தந்தையே என வாய்விட்டு அழைக்க இயலவில்லையே. உயர்ந்த வேள்வித் தீயாய் அவர் நகர்ந்து நகர்ந்து சென்றும், நின்றும், கண்மூடி தியானித்திருப்பதை கவனிக்க கவனிக்க- ரோமாஞ்சனமாக இருந்தாலும், தாங்க இயலாத துக்கம் பீறிட்டு எழுகிறதே!'
லக்ஷ்மி நாராயணனின் கண்களில் மளுக்கென்று கண்ணீர் தளும்பியது. சூடான கண்ணீராக கன்னத் தில் தடம் செய்து வழிந்தது. அருகமர்ந் திருந்த வேங்கட நாராயணன் அவன் நிலையறிந்து அவனது கைகளை இறுக அழுத்தினான்.
""ஸ்ரீஹரியை நாம் பரிபூரணமாக சரணாகதி ரக்ஷணம் செய்யவேண்டும். அவனும் அதையேதான் விரும்புவான். ஒரு தாயின் அன்போடு அவன் நம்மை அணுகுவான். ஒரு குழந்தை எப்படி தாயினை அணைத்து, அனைத்தும் தனக்கு தாயே பிரதானமென்று அவளையே அடைந்திருக்கிறதோ அதேபோன்று நாம் அவனையே பாசத்துடன், பக்தியுடன் அணுக, ஒரு தாயைப்போல- ஒரு பசுவைப் போல ஓடோடிவந்து ரட்சிப்பான். அவன் அலாதியானவன்.
"சுத்தம் பாகவதஸ்யான்னம்
சுத்தம் பாகீரதி ஜலம்
சுத்தம் விஷ்ணு பத த்யானம்
சுத்தம் ஏகாதசி வ்ரதம்.'
பகவானே சொன்னது இவ்வழகிய ஸ்லோகம். அவன் இதன்மூலம் நம்மை சுத்தி கரிக்கிறான். லோகத்தில் ஜனித்துவிட்டாய்.
(எதையெல்லாம் அவன் சுத்தம் என்று பட்டியலிடுகிறானோ, அவையனைத்தையும் நாம் விடாது பிடித்துக்கொள்ள வேண்டும்.) என்னையும் நீ சரணாகதி செய்துவிட்டாய். உனக்கு நான் பரிபூரண கடாட்சம் செய்யவேண்டும். எனவே நீ சுத்தமாகு. நீ சுத்தமாவதன்மூலம் நீ என்னைத் தேடிவரும் பாதையினை உருவாக்கி, உனக் குப் பின்னால் வருபவனுக்கும் நீ உதவுகிறாய்.
பாகவதோத்தமர்கள் உண்ட ஷேசம் விசேஷ மானது. அவர்கள் உண்ட மிச்சம் எச்சி லல்ல. பாத்திரத்தில் இருக்கும் மீதம்- அதுவே சுத்த பாகவதஸ்யன்னம்- விசேஷமானது. அந்த ஷேசத்தை நாமுண்ண பரிசுத்தம் கிடைக்கும். அது மகா பவித்ரமானது. கங்காவின் பெருமை அளவிடமுடியாதது. வகுப்பு ஆரம்பமே கங்கையின் விசேஷம் பற்றியதுதான்.
"சுத்தம் (பகவத்) விஷ்ணு பத தியானம்!' விஷ்ணுவே தன்னைப் பற்றி தியானிக்கச் சொல்கிறார். முரணான சமயத்தில் உருவான கீதை உபதேசத்தில் பீஷ்மர் வாயிலாக பலப்பல விசேஷார்த்தங்களை வெளிப்படச் செய்தவர்...'' என்று ஸ்ரீராயர் நீண்ட வகுப்பெடுத்துக் கொண்டிருப்பதை லக்ஷ்மி நாராயணன் பிரம்மிப்புடன் பார்ப்பதையும், கண்கலங்குவதையும் ஸ்ரீராயர் கண நேரமே கண்ணுற்றாலும், கொஞ்சமும் நிலைமாறாது மெல்ல மெல்ல பக்குவமாகத் தனது உரையை முடித்துக்கொண்டார்.
ஸ்ரீராயருக்கு அடுத்தடுத்து பல பணிகள் நிறைவுறாமல் இருப்பதாகப்பட்டது. இடையில் இந்தபடி பந்துக்களிடம் நேரிடையாகப் பேசி, அவர்களிடம் சம்மதம் பெற அவர் குருராஜனை கேட்டுக்கொண்டதே சாலச்சிறந்தது என்ற நினைவோடு, அடுத்து ஓரிரு தினங்கள் கழித்து வெங்கண்ணரையும் அப்பண்ணாவையும் ஒருசேர அழைத்தார். இருவருமே அவர் எதிரிரே வந்து வணங்கி நின்றனர். அந்த பவ்யகோலத்தில் மகா பக்தியினை ஸ்ரீராயர் கண்ணுற்றார்.
பகவானுக்கு படைக்கப்படும் பிரசாதம் அவருக்குப் ப்ரியமானதாய், விசேஷமாக இருந்தால் அது பவித்ரமாகப் போற்றப்படு கிறது. அதுபோன்று தனக்கெதிரே நிற்கும் தனது இரு சீடர்களை ஸ்ரீராகவேந்திரர் பிரியமாய் நோக்கினார்.
""நான் இப்போது உங்கள் இருவருக்கும் மிக முக்கியமான கடமைகளைச் செய்யப் பணிக்கப் போகிறேன்.''
""பாக்கியம் ஸ்வாமி. என்னவென்று சொல்லுங்கள். உடனே செய்ய ஆவலாயுள் ளேன்'' என்றார் அப்பண்ணா.
""நானும் காத்திருக்கிறேன் ஸ்வாமி'' என்றார் வெங்கண்ணர்.
""இந்தப் பணியில் வெங்கண்ணர் தனது பதவி, அதிகார வீச்சுகொண்டு பணியாற்றவேண்டும். அப்பண்ணா, நீர் உண்மையை அப்படியே இந்த உலகிற்குத் தெரியப்படுத்தவேண்டும். உனது பயணம் நீண்டது. சற்று சிரமப்பட்டுச் செய்யவேண்டிய பயணம். ஆனால் இது நீ மட்டுமே செய்ய வேண்டிய ஒன்று. அதுவும் நீ இதைச் செய்தால் மட்டுமே இது அனைவரையும் சீக்கிரம் சென்றடையும்.''
இருவர் முகத்திலும் பெருமிதமான புன்னகையும் கேள்விக்குறியும் ஒருங்கே எழுத்தன.
""ஸ்வாமிகள் சொல்வது மிகவும் பொறுப் பான... கவனமான...''
""உண்மைதான். அதற்காகவே ஒரு சேர உங்கள் இருவரையும் அழைக்கவேண்டிய தாகிவிட்டது. ம்...'' என்று சில நொடி மௌனம் சாதித்தவர், ""எனது பிருந்தாவனப் பிரவேசப் பணியினை இருவரிடமும் பகிர்ந்தளிக்க விரும்புகிறேன்'' என்றார்.
அப்பண்ணாவினால் அழுகையைக் கட்டுப்படுத்த இயலவில்லை. கடுமையான உபவாசம், யோகப் பயிற்சிகளால் மெலிந் திருந்த அந்த தேகத்தில் அவரது வயிறு அழுகை னால் உள்ளுள் உடலோடு ஒட்டி, பிறகு தன் நிலை அடைய சில நிமிடங்கள் ஆனது.
குலுங்கிக் குலுங்கி அழுதவர் அப்படியே மயங்கிச் சரிந்தார். வெங்கண்ணர் உடனடி யாக அவரைத் தாங்கிக்கொண்டார். அருகில் மண் கலயத்திலிருந்த நீரெடுத்துத் தெளித்து அவரை விழித்தெழச் செய்தார். உதடுகள் நடுநடுங்க அவர் மறுபடி கைகூப்பி அழுத தும், வெங்கண்ணராலும் தாங்க இயலாது துக்கம் அவரைத் தொற்றிக்கொள்ள கண்ணீர் திரண்டது. அவர் விசும்பல் நாசூக்காய் இருந்ததால், அவரால் தன்னைக் கட்டுப் படுத்திக்கொள்ள முடிந்தது. ஸ்ரீராயர் எந்த சலனமும் இல்லாது நின்றார்.
""நீங்கள் இருவருமே என்னால் கண்டெடுக் கப்பட்ட மகாபிரசாதங்கள். ஸ்ரீமன் நாராயணனுக்கும், எனக்கும் பிரியமாகப் படைக்கப்பட்ட வஸ்துகள் நீங்கள். எனக்கு சிலாக்கியமான சீடர்கள். அதற்காகவே இப்பணிக்கு உங்கள் இருவரை மட்டுமே தேர்ந்தெடுத்துள் ளேன்.
ஆனால் நீங்கள் இருவருமே உணர்ச்சிவசத்தில் எனது நோக்கத்தை சரியான திசையில் நகர்த்துவீர்களா என்ற சந்தே கத்தையல்லவா என்னுள் ஏற்படுத்துகிறீர்கள்?''
அப்பண்ணா உடனே பதட்டமானார்.
""ஸ்வாமிகள் நான் குறுக்கிடுவதற்கு மன்னிக்க வேண்டும். தங்கள் பேச்சே என் மூச்சாக வரித்து வாழ்கிறேன். தங்களைப் பிரிவதென்பது என்னால் இயலுமா ஸ்வாமி. அதற்கு பதில் காலன் என்னை வந்து அழைத்துப்போவது நல்லது. இக்கணமே எனது உயிர் இந்த தேகத்தைவிட்டு அகன்றுவிடாதா என்ற எண்ணமே மேலோங்குகிறது. தங்களது பிருந்தாவனப் பிர வேசத்தை தாங்கள் மறு பரிசீலனை செய்யலாகாதா?''
""யோசித்துதான் பேசுகி றாயா அப்பண்ணா. இந்த ஜென்மாவில் நான் இதனை மேற்கொள்ள வேண்டும் என்பதே என் மூலராமனின் விருப்பமான ஆணை. அதனால் தானோ என்னவோ "பிருந்தா வனத்தில் ஜீவனுடன் பிரவே சிக்கவும்' என்ற சொல்லை என் உள்ளிலிருந்து அவனேதான் உச்சரித்தது. குடந்தையிலிருந்து சஞ்சாரம் செய்கையில் வெங்கண்ணாவை மட்டு மல்ல; உன்னையும் காட்சிப் படுத்தியதும் அந்த என் ப்ரிய மூலராமன்தான்.
அந்த எனது ப்ரிய மூலராமக் கட்டளை இது!''